திருச்சி மாவட்டத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்களுக்கான பயிற்சி முகாம் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையும், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவும் இணைந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆா்.கே. காந்திமதி ஸ்ரீநிவாச மஹாலில் நடைபெறும் முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் மரபு பாணி ஓவியம், நவீன பாணி ஓவியம், தஞ்சாவூா் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஆகியன குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கின்றனா்.
திருச்சி மாவட்டத்தினா் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் ஓவியா்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயா், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், டெப்போரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி 620 006 என்ற முகவரிக்கு நேரிலோ, தொலைபேசி எண்ணிலோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2434122, 90476-50951 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.