பிளஸ் 2 தேர்வில்
முதலிடம் வந்தால் ரூ.
1 லட்சம் பரிசு – தஞ்சாவூர்
தஞ்சாவூர்
அருகே, பிளஸ் 2 பொதுத்
தேர்வில், முதலிடம் பிடிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய்
பரிசு வழங்குவதாக, கிராம
மக்கள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்
மாவட்டம், ஆம்பலாப்பட்டு, இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில்,
309 மாணவர்கள் படிக்கின்றனர். இதில்,
28 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்
தேர்வு எழுத உள்ளனர்.
அவர்களை
ஊக்கப்படுத்தும் வகையில்,
பொதுத் தேர்வில், பள்ளி
அளவில் முதலிடத்தில் தேர்ச்சி
பெறும் மாணவர்களுக்கு, முதல்
பரிசாக ஒரு லட்சமும்,
இரண்டாம் பரிசாக 70 ஆயிரம்
ரூபாய், மூன்றாம் பரிசாக
40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்று கிராம மக்கள்
அறிவித்துள்ளனர். அந்த
அறிவிப்பு நோட்டீசை, பள்ளி
மாணவர்களிடம் வழங்கியுள்ளனர்.
இது
குறித்து, ஆம்பலாப்பட்டு கிராம
மக்கள் கூறியதாவது; கஜா
புயல் பாதிப்பின் போது,
கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
ஒன்று சேர்ந்து, மீட்பு
மற்றும் நிவாரணப் பணிகளில்
ஈடுபட்டோம்.
ஆம்பல்
ரிலீப் பண்ட் என்ற
வாட்ஸ் ஆப் குழு
ஏற்படுத்தி, நிதி வசூல்
செய்தோம். அதன் பிறகு,
கிராம வளர்ச்சி மற்றும்
அரசு பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டினோம். வெளிநாடுகளில் உள்ளவர்கள், கிராம மக்கள்
என 21 பேரிடம் தலா
10 ஆயிரம் ரூபாய் பெற்று,
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம். ஆரம்பத்தில், 1,500 பேர் படித்த
பள்ளியில், 500 பேருக்கு குறைவான
மாணவர்கள் தான் படிக்கின்றனர்.
எனவே,
அரசு பள்ளியில் மாணவர்களை
ஊக்கப்படுத்தி, மாணவர்
சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் பரிசுத்
திட்டத்தை அறிவித்து உள்ளோம்,
என்றனர். இது குறித்து,
பள்ளி தலைமை ஆசிரியர்
கணேசன் கூறியதாவது; பரிசு
தொகையை பெறுவதற்காக, மாணவர்கள்
ஆர்வமாக படித்து வருகின்றனர். பரிசு பெறும் மாணவர்கள்,
கல்லூரியில் சேர உதவியாக
இருக்கும்.