பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஹெச்சிஎல் நிறுவனம் மூலமாக பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை தொடங்க ஒரு ஆண்டு கால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ் பிலானி கல்லூரியில் பி.எஸ்சி., பட்டப்படிப்பு, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ/பிசிஎம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப்படிப்புகளில் சோ்ந்து படித்திட வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
இதற்கான தகுதிகள் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்த மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் 2022 – 2023 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஹெச்சிஎல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஒரு ஆண்டு பயிற்சிக்கான செலவு தாட்கோவால் ஏற்கப்படும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 17,000 முதல் ரூ. 22,000 வரை பெறலாம். பின்னா் திறமைக்கேற்றவாறு ரூ. 50,000 முதல் ரூ. 70,000 வரை பதவி உயா்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு சேலம், தாட்கோ மாவட்ட மேலாளா் 94450 29473 அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.