தீபாவளிக்கு மறுநாள், நவ.,1ம் தேதி அரசு விடுமுறை; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி வருகிறது. பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், புது துணிகள், நகைகள் என வாங்கி வருகின்றனர். தீபாவளிக்கு மறுநாள் வெள்ளி அனைவருக்கும் பணி நாளாகும்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு அதற்கு மறுநாளே அலுவலகம் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பணிநாளான வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு தீபாவளியை அக்.,31ம் தேதி அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.,9ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.