காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 30ம்தேதி முதல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தொகுதி-II மற்றும் IIA முதன்மை தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் – ஆர்ஆர்பி தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டிஎன்பிஎஸ்சி தொகுதி- II மற்றும் IIA முதல்நிலை தேர்வு கடந்த 14ம்தேதி நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி- II மற்றும் IIA முதன்மை தேர்வு மற்றும் தற்போது மத்திய ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள (ஆர்ஆர்பி) (காலிப் பணியிடம்-11,588) தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30தேதி முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி, வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044–2723 7124 மற்றும் 044–2723 8894 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.