விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 1, 2 போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி சனிக்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிற்சி வட்டத்தின் கீழ், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், பங்கேற்ற பல்வேறு மாணவா்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சோந்துள்ளனா். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தொகுதி 1, 2 முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (ஜூலை 15) முதல் தொடங்குகின்றன. இந்த பயிற்சி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோா் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நேரில் அணுகி, தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.