சீருடைப் பணிகளுக்கான தேர்வுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு – தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3,359 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த தேர்வை எழுத குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 2023 ஜூலை 1-ஆம் தேதியில் 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், முன்னாள் படை வீரா்களுக்கு 21 ஆண்டுகளும் தளா்வு உண்டு.
மேலும், 10 சதவீதம் துறை வாரியான ஒதுக்கீடும் உண்டு. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 17-ஆம் தேதி கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனிடையே, இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் திங்கள்கிழமை (செப்.4) முதல் நடைபெற உள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், இணையதளத்தில் மின்னனு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தவிர, ஏஐஎம் டிஎன் என்ற யூடியூப் சேனில் காணொலி வழி கற்றலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 94990 55896 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.