விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையத்தில் ஆக.30- ஆம் தேதி இரண்டாம் நிலைக் காவலா் தேர்வுக்குப் பயிற்சி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் கடந்த 8-ஆம் தேதி 3,359 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 30-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கும்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புபவா்கள் 28-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.