சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தையின் நலனுக்காக மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறுசேமிப்புத் திட்டமாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல் உள்ளது. ஜூலை – செப்டம்பர் 2024 காலாண்டிற்கான வட்டி விகிதம் 8.2%ஆக உள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா யார் தொடங்கலாம்? 10 வயது நிரம்பாத பெண் குழந்தைகளின் பெயரில் பாதுகாவலர் ஒருவர் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்குகளை திறக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தில் எத்தனை கணக்கு தொடங்கலாம்? இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம். ஒருவேளை முதல் பிரசவத்திலோ, இரண்டாவது பிரசவத்திலோ 2 பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், இரண்டுக்கும் மேற்பட கணக்குகளை தொடங்கலாம். இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழுடன், பாதுகாவலரின் பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 80சி-ன் கீழ் முதலீட்டாளர் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகைகளைப் பெறலாம். அத்துடன், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
எந்தவொரு நிதியாண்டிலும் ரூ.1,50,000க்கு அதிகமாக வைப்புத்தொகை செலுத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழை தயாரித்தவுடன் கணக்கு உடனடியாக மூடப்படும். அத்துடன் கணக்கில் இருக்கும் தொகை இறப்பு தேதி வரையிலான வட்டியுடன் சேர்த்து காப்பாளரிடம் வழங்கப்படும்.