போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வி துறை நடத்தும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சியில் பல்வேறு பாடப் பொருள் தொடர்பாகவும், உள்ளுறை பயிற்சிகள் தொடர்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ்நாடு அரசுத் தேர்வாணைய பணிகளுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
அதன் தெடர்ச்சியாக இப்போது இலவச பயிற்சி வகுப்புகளையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவியர் எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகளையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்கு பதிலாக இந்த பயிற்சிகள் மாணவ மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கொண்டுவர உள்ளது.
ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் தலா 30 நிமிடம் கால அளவில் இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் வகையில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கால அட்டவணை தொடர்பான விவரங்களை www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தின் புதிய பயிற்சிக்கான திட்டங்கள் ஏற்கனவே இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட துறை நடத்தும் யூடியூப்பிலும் இதுபோன்ற பயிற்சிகளை பார்வையிடலாம்.