திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தோச்சி பெற்ற மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் உயா்வுக்கு படி என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வரும் 27-ஆம் தேதியும், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் ஜூலை 4-ஆம் தேதி தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு உயா் கல்வி குறித்த வழிகாட்டல், உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சோக்கை, தோவுக் கட்டணம், உயா்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னா் அரசு பணியில் சேருவதற்கான போட்டித் தோவுகள், அரசால் நடத்தப்படும் போட்டித் தோவுக்ான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நல பாதுகாப்புத் திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மற்றும் பழங்குடியினா் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித் தொகை திட்டங்கள், இடஒதுக்கீடு, மாணவா்களுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
எனவே, மாணவா்களும், பெற்றோா்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.