மத்திய பல்கலைகளுக்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான, ‘கியூட்’ நுழைவு தேர்வுக்கு, தமிழக மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண் இன்றி பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 2021ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழும், மதிப்பெண் குறிப்பிடாமல், ‘ஆல் பாஸ்’ என குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, கியூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழக மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை கட்டாயமாக பதிவிடும் நிலை ஏற்பட்டது. இதனால், 10ம் வகுப்பு ஆல் பாஸ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, தேசிய தேர்வு முகமைக்கு மாணவர்கள், பெற்றோர் சார்பில், ‘இ- – மெயில்’ அனுப்பப்பட்டது. இதையடுத்து, கியூட் தேர்வு விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கியூட் தேர்வு பிரிவு மூத்த இயக்குனர் சாதனா பராஷர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கியூட் தேர்வில் பங்கேற்க, கொரோனா ஊரடங்கு காலத்தில், ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பதிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி, மாணவர்கள் தங்களுக்கான தேர்ச்சி ஆண்டை, 2021 என்று தேர்வு செய்யும்போது, எந்த பாடத்திட்டம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தமிழக பாடத்திட்டம் என்பதை தேர்வு செய்வோருக்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு மற்றும் அதற்கான மதிப்பெண் பதிவு செய்ய வேண்டிய பகுதி இடம் பெறாது.
ஏற்கனவே விண்ணப்பப் பதிவு செய்து, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும், 10ம் வகுப்புக்கான மொத்த மதிப்பெண், சதவீதம் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்படும். எனவே, தமிழக மாணவர்கள் சிரமமின்றி ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு, 011 – 4075 9000, 011 – 6922 7700 என்ற தொலைபேசி எண்ணிலும், cuet-ug@nta.ac.in என்ற இ – மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை, https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பத்திலும், 2021ல், ‘ஆல் பாஸ்’ ஆன தமிழக மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


