தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வருகிற ஆக.1, 2 ஆகிய தேதிகளில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ஆக.1-ஆம் தேதி, கற்பி ஒன்று சோ புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சா், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கா் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பெளத்தமும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆக.2-ஆம் தேதி என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகாா், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகா் கலைஞா், சமூக நீதி காவலா் கலைஞா் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.