கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து கற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அவரது அறிக்கை:மதுரை, பழநி, திருச்செந்துார், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதுார் கோவில்களில் அர்ச்சகர், பட்டாச்சாரியார் பயிற்சி பள்ளிகள்; மதுரை, திருவண்ணாமலை, சமயபுரம் கோவில்களில் ஓதுவார் பயிற்சி பள்ளிகள்; ஸ்ரீவில்லிப்புத்துாரில் பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளி; பழனி, திருத்தணியில் பகுதி, முழுநேர தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.பழனி, மயிலாப்பூர், திருச்செந்துார் கோவில்களில் வேத ஆகம பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் படிக்கும் ஹிந்து மதம் சார்ந்த மாணவர்களுக்கு இலவச உணவு, சீருடை, தங்கும் வசதிகளுடன் மாதம், 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. பகுதி நேரம் படிப்பவர்களுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர, 13-24 வயது; ஓதுவார் பயிற்சிக்கு, 13- 20 வயது; தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிக்கு, 13 -16 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேத ஆகம பாடசாலையில் சேர, 12-16 வயது; பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளியில் சேர, 8-18 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த கோவில் அலுவலகத்தில் நேரிலோ, இணையதளம் வாயிலாக பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.