கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியான பயனாளிகளுக்கு ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராகவேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுளள பயனாளிகளுக்கு ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாா் இணைப்புடன கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கி பயன்பெறலாம். தபால்காரா் மற்றும் கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்க முடியும்.
இந்த கணக்குக்கு இருப்புத் தொகை எதுவும் கிடையாது. கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், டோா் ஸ்டேப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரா் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல், நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள், பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளா் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.