தேனி தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்ட காய்கறி சாகுபடி, பராமரிப்பது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சிவழங்க உள்ளதாக தோட்டக்லை துணை இயக்குனர் பிரபா தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நகர் பகுதியில் மாடித்தோட்டத்தில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த மாவட்டத்தில் ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிகள் ஒன்றிய அளவில் வழங்கப்படும். இதில் இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கல்லுாரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியில் பயிர் பராமரிப்பு, தோட்டம் அமைப்பது, மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறி வகைகள், பயன்படுத்தப்படும் உரங்கள், மருந்துகள் குறித்து விளக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மாடித்தோட்டம் அமைக்க 6 வகை காய்கறி விதைகள் 6 தென்னை நார் வளர்ப்பு ஊடகம், பூச்சி கொல்லி மருந்து, கையேடு, உயிர் உரங்கள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு வழங்குகிறோம் என்றார்.