ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
6.33 லட்சம் பேர் விண்ணப்பம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.
அதிகாரி தகவல்
இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


