பி.ஆர்க்., பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு கட்டுமான பணி சார்ந்த அரசு துறைகள் மற்றும் தனியார் துறைகள், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
கற்பனை திறன் கொண்டவர்கள், வரைதல், எழுதுதல் மீது ஆர்வம் கொண்ட மாணவர்கள் கட்டாயம் பி.ஆர்க்., பட்டப்படிப்பை பிளஸ்2க்கு பிறகு தேர்வு செய்து படிக்கலாம்.பொதுவாக, பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கட்டுப்பாட்டிலே செயல்படுத்தப்படும்.
கோவை இந்துஸ்தான் ஆர்க்கிடெக்சர் கல்லுாரி இயக்குனர் சுரேஷ் பாஸ்கர் கூறியதாவது:
பி.ஆர்க்., என்னும் ஐந்தாண்டு பட்டப்படிப்பு மட்டும், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் (சி.ஓ.ஏ.,) அமைப்பு கட்டுப்படுத்துகிறது. நுழைவுத்தேர்வு நடத்துவது, பாடத்திட்டம், விதிமுறைகள் வகுத்தல் அனைத்தும் இவ்வமைப்பே நேரடியாக மேற்கொள்ளும்.பிளஸ் 2 பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், இப்படிப்பில் சேரலாம். கட்டாயம் சி.ஓ.ஏ., அமைப்பு சார்பில் தேசிய அளவில் நடத்தப்படும், ‘நாட்டா’ நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே, கவுன்சிலில் அல்லது மேனேஜ்மென்ட் எதுவாயினும் சேர்க்கை புரிய முடியும்.
நுழைவுத்தேர்வு ஏப்., ஜூன் மாதங்கள் என, இரண்டு முறை ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டுக்கான முதல்நிலை தேர்வு ஏப்., மாதம் முடிந்துள்ளது. ஜூனில் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா காரணமாக, ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ளது.நடப்பாண்டில், பிளஸ் 2 ‘ஆல் பாஸ்’ என்பதால், பிளஸ் 2 மதிப்பெண், 200க்கும், நாட்டா ‘நுழைவுத்தேர்வு’ மதிப்பெண் 200க்கும் கணக்கிட்டு, ‘கட் ஆப்’ அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். தமிழக அரசு கவுன்சிலிங் வாயிலாக கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். ஆக., முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
சுயதொழில்களுக்கு ஏற்ற படிப்பு இது. ஐந்தாண்டு முடித்துவிட்டால், சி.ஓ.ஏ., அமைப்பில் பதிவு செய்து கட்டடவியலாளர் ஆக தனியாக கம்பெனி துவங்கிவிட முடியும். அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் சார்ந்த அனைத்து துறைகள், வெளிநாட்டு நிறுவனங்கள் என வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. முழுவதும் கற்பனைத்திறனை கொண்டே, வேலைவாய்ப்பு நல்ல நிறுவனங்களில் பெற முடியும்.விபரங்களுக்கு, https://www.coa.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.