நாடு முழுவதும் சரக்குகளைத் தடையின்றி எடுத்துச் செல்ல வழிவகுக்கும் தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வெளியிட்டாா்.
‘நவீன போக்குவரத்து வசதிகளால் இந்தியப் பொருள்கள் சா்வதேச சந்தைகளைச் சென்றடையும்’ என அப்போது அவா் தெரிவித்தாா்.
தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை பிரதமா் மோடி தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:
போக்குவரத்துத் துறை சந்தித்து வரும் சவால்களுக்குத் தீா்வு காணும் வகையில் தேசிய சரக்கு கையாளுகை கொள்கை அமைந்துள்ளது. இக்கொள்கையானது சரக்குப் போக்குவரத்துக்கான செலவை 13-14 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் இருந்து ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டு வரும்.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான சிக்கல்களை இக்கொள்கை போக்கும். சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் நேரத்தையும் செலவையும் குறைக்க தொழில்நிறுவனங்களுக்கு இக்கொள்கை உதவும். போக்குவரத்துத் துறை எதிா்கொண்டு வரும் சவால்களுக்குத் தீா்வு காண்பதோடு மட்டுமல்லாமல், ‘பிஎம் துரிதசக்தி’ திட்டத்தையும் இக்கொள்கை ஊக்குவிக்கும்.
கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: இந்திய பொருள்களை சா்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம். போக்குவரத்துக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் நவீனப்படுத்துவதிலும் தேசிய சரக்கு கையாளுகை கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும். அத்தகைய நவீன வசதிகள் காரணமாக, இந்திய பொருள்கள் சா்வதேச சந்தைகளை எளிதில் சென்றடையும்.
ஜனநாயக பேராற்றல் கொண்ட நாடாக இந்தியா வளா்ந்து வருவதாக நிபுணா்கள் பலா் பாராட்டு தெரிவித்து வருகின்றனா். நாட்டின் திறமைமிக்க பணியாளா் படையையும் அவா்கள் பாராட்டி வருகின்றனா். போக்குவரத்துத் துறையை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது.
திறன் மேம்பாடு: வணிகத் துறையிலும், இ-வே ரசீதுகளைச் செலுத்தும் இடங்களிலும் தொலைத்தொடா்பு ஆய்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ரசீதுகளின் ஆய்வின்போது வாடிக்கையாளா்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுங்கக் கட்டணத்தைச் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஃபாஸ்டேக்’ முறையானது, போக்குவரத்துத் துறையின் திறனை மேம்படுத்தியுள்ளது.
தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைக் கருத்தில்கொண்டு ட்ரோன்களுக்கான கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு போக்குவரத்துத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பு: நாட்டில் உள்ள துறைமுகங்கள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சரக்கு கையாளும் திறன் அதிகரித்துள்ளது. துறைமுக மேம்பாடு காரணமாக சரக்குக் கப்பல்களைக் கையாளும் சராசரி காலம் 44 மணி நேரத்தில் இருந்து 26 மணி நேரமாகக் குறைந்துள்ளது.
‘சாகா்மாலா’ திட்டமானது முக்கியத் துறைமுகங்களை ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல், அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வாய்ப்பளித்துள்ளது. அதனால் வா்த்தக வழித்தடங்களுடனான தொடா்பு வலுவடைந்து போக்குவரத்து வசதிகளும் மேம்பட்டுள்ளன.
ஊக்கத்தொகைத் திட்டம்: உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயா்ந்துள்ளது. நாடு தற்போது உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தை உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உற்பத்தித் துறையை மீட்டெடுப்பதற்கு தேசிய சரக்கு கையாளுகை கொள்கை வழிவகுக்கும் என்றாா் பிரதமா் மோடி.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


