நீட் தேர்வு
முறை மாற்றம்
மருத்துவக் கல்வியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு
பிரிவினருக்கான நீட்
நுழைவுத் தேர்வு, வரும்
நவ., 13, 14ல்
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வு முறையில் திருத்தம்
செய்யப்பட்டது. இதை
எதிர்த்து மாணவர்கள் சிலர்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.இந்த மாற்றத்துக்கு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற
அமர்வு கடும் எதிர்ப்பு
தெரிவித்திருந்தது. அரசியல்
அதிகாரம் உள்ளது என்பதால்,
இளம் மருத்துவர்களை கால்பந்தாக நினைப்பதா என, விமர்சித்தது.
மேலும்,
நடந்த விசாரணையின்போது, தேர்வு
முறையில் மாற்றம் செய்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம்.
அடுத்தாண்டு செய்தால் என்ன,
வானம் இடிந்தா விழுந்துவிடும்.மருத்துவக் கல்வி வியாபாரமாக இருக்கிறது. தற்போது தேர்வு
முறையையும் வியாபாரமாக்க வேண்டுமா
என, அமர்வு கூறியது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது
மத்திய அரசின் சார்பில்
ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி
கூறியதாவது:இந்த அமர்வின்
கருத்துக்கள் மற்றும்
மாணவர்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, தேர்வு முறையிலான
மாற்றம், அடுத்தாண்டு முதல்
அமல்படுத்தப்படும். கடந்தாண்டைப் போலவே இந்தாண்டு தேர்வு
முறையும் இருக்கும். இவ்வாறு
அவர் கூறினார்.
மத்திய
அரசின் இந்த மனமாற்றத்துக்கு, அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், நுழைவுத் தேர்வை
எப்போது நடத்துவது என்பது
குறித்து மத்திய அரசே
முடிவு செய்யலாம் என்றும்
அமர்வு கூறியுள்ளது.
ஏற்கனவே,
நவ., 13, 14ல்
நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற
விசாரணையின்போது, புதிய
தேர்வு முறைக்கு மாணவர்கள்
தயாராகும் வகையில், நுழைவுத்
தேர்வை ஒத்தி வைப்பதாக
மத்திய அரசு கூறியிருந்தது.
அதன்படி,
அடுத்தாண்டு ஜன., 11, 12ல்
நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது
பழைய முறையிலேயே நுழைவுத்
தேர்வு நடக்க உள்ளதால்,
நுழைவுத் தேர்வு தேதி
மாற்றப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.