தமிழக அரசின் சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு அடுத்த ஆண்டு யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்க உள்ளது.
சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.
2023-ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 7-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.
மேலும், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை யு.பி.எஸ்.சி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் நவம்பர் 13-ந்தேதி நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள். டிசம்பர் 2-வது வாரம் பயிற்சி தொடங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


