பகுதி நேர பி.இ. படிப்புக்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் பகுதி நேரமாக பி.இ. படிப்பு நடத்தப்படுகிறது. 4 ஆண்டு பட்டப் படிப்பான இது கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சிஐடி), அரசு தொழில்நுட்பக் கல்லூரி (கோவை), சேலம், நெல்லை, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 8 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.
பகுதி நேர பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகளை கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த நிலையில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியிலான (https://www.tneaonline.org/) விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள ஜூலை 23- ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 94869 77757 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.