வேலூா் ஓட்டேரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடத்துகின்றன.
இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலூா், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குப் பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும் வழங்கப்பட உள்ளன.
முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நா்சிங், பாா்மசி, பொறியியல் படித்துள்ள மாணவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.