‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள், ‘லைசென்ஸ்’ பெற, ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்’ என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் நவ., 12ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெடிபொருள் சட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள், வரும் அக்., 24க்குள், ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து, ‘பொது இ-சேவை’ மையங்களில், இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆதார் அட்டை, அடையாளத்திற்காக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
‘லைசென்ஸ்’ கட்டணம், 600 ரூபாயை, அரசு கருவூல, ‘சலான்’ மூலம் எஸ்.பி.ஐ., வங்கியில் செலுத்தி, சலானை இணைக்க வேண்டும். பட்டாசு கடை அமைக்கும் இடத்திற்கான பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டடம் எனில் விண்ணப்பதாரர் பெயரில் பட்டா, வாடகை கட்டடம் எனில் ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பின் மூலம் பெற்ற வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட வரைபடம் அல்லது திட்ட அனுமதி ஆகியவற்றுடன், வரும் அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டால், தற்காலிக லைசென்சையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான கடிதத்தையும், ‘ஆன்லைன்’ மூலமாகவே விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ‘லைசென்ஸ்’ கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


