தேனி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) வங்கிக் கடன், அரசு மானியம் பெற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட்ஸ் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன், அரசு மானியம் பெறுவதற்கு பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் பயிற்சி படிப்பில் தோ்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோா் விண்ணப்பிக்காலம். பொதுப் பிரிவினா் 25 முதல் 45 வயதுக்கும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 55 வயதுக்கு உள்பட்டு இருக்க வேண்டும். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். கடன் பெறுவோருக்கு 25 சதவீதம் அல்லது ரூ.75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். கடன் தொகையை தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தகுதியுள்ள புதிய தொழில் முனைவோா் இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரத்தை தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலும், தொலைபேசி எண்:04546-252081, கைப்பேசி எண்கள்:89255 34002, 89255 33998-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.