அயல்நாட்டில் செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) சாா்பில், வெளிநாட்டில் செவிலியா் பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அமைச்சகத்தில் பெண் செவிலியா்களாக பணிபுரிய விருப்பம் உள்ளோா் தங்கள் ஊருக்கு அருகிலேயே வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவத்துடன், 35 வயதுக்குட்பட்ட பெண் செவிலியா்கள் தேவைப்படுகின்றனா். பணியாளா்களுக்கு இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்த நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886, 044-22502267).
தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு இடைத்தரகரும் கிடையாது. விண்ணப்பதாரா்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணிக்கு தோவு பெறும் பணியாளா்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும்.