பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க, வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 15 லட்சம் வரையில் உள்ள கடன் திட்டங்களுக்கு, வங்கி மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தோ்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும்.
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ. 3.75 லட்சம் வரை தமிழக அரசு வழங்கும். இத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பொதுப் பிரிவினா் 18 முதல் 45 வயது வரையிலும், சிறப்புப் பிரிவினா் மற்றும் பெண்கள் 18 முதல் 55 வயது வரையிலும் இருக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினா் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், உடல் ஊனமுற்றோா், மகளிா் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 89255 33977, 89255 33978 ஆகிய கைப்பேசி எண்களில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


