TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கடந்த 11 ஆம் தேதி முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகளின் நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது தெரிய வந்துள்ளது. பாஜக எம்.பி.யான விவேக் தாக்கூர் தலைமையிலான இந்த நிலைக்குழு நாடு முழுவதிலும் 2022 – 2023 கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மீது மத்திய அரசுக்கு ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதில், 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 62,72,380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப்படாமல் உள்ளன.
இவற்றில், 7,47,565 துவக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 1,46,334 மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 92,666 பணியிடங்களும் காலியாக இடம் பெற்றுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது தனது கருத்துகளை முன்வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு, இவற்றை உடனடியாக நிரப்பினால்தான் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் சதவிகிதத்தை விரைந்து அமலாக்க முடியும் என அந்த நிலைக்குழு கருத்து கூறியுள்ளது. இந்த ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப்படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் எனப் பதிவு செய்துள்ளது. கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது.
எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை என மத்திய அரசு கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கூறி அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதை ஏற்று மத்திய கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.