Home Blog 2023 – 24 வேளாண் பட்ஜெட் – உங்கள் கருத்துக்களை தமிழக அரசுக்கு தெரிவிக்கலாம்

2023 – 24 வேளாண் பட்ஜெட் – உங்கள் கருத்துக்களை தமிழக அரசுக்கு தெரிவிக்கலாம்

0

2023 - 24 வேளாண் பட்ஜெட் - உங்கள் கருத்துக்களை தமிழக அரசுக்கு தெரிவிக்கலாம்


2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக உழவன் செயலி, கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, வேளாண் உற்பத்தியை உயர்த்தி, அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, கிராமங்களின் தன்னிறைவினை ஏற்படுத்துவதற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம், சிறுதானிய இயக்கம், பனை மேம்பாட்டுத்திட்டம், பாரம்பரிய நெல் ரகங்கள் மேம்பாட்டுத்திட்டம், கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை, தோட்டக்கலைப் பயிர்களுக்கான பல்வேறு திட்டங்கள், வேளாண் இயந்திரமயமாக்குதல், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப்செட்டுகள் திட்டம், உழவர் சந்தைகளை புதுப்பித்தல், புதிதாக வேளாண் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்து, இவ்வரசு செயல்படுத்தி வருகிறது.

2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்பு: கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரை 10 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு நிறைவு: தமிழக முதல்வரின் அறிவுரைக்கேற்ப, 22.01.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்புக்கூட்டம் வேளாண்மை (ம) உழவர்நலத்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து, 24.01.2023 அன்று திருநெல்வேலியில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இதுபோன்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.

உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.

கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி: வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,வேளாண்மை – உழவர் நலத்துறை,தலைமைச் செயலகம்,புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னை – 600 009.

மின்னஞ்சல் முகவரி: tnfarmersbudget@gmail.com

வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி: 9363440360

மேற்காணும் வழிகளில் இதுவரை, 700 க்கும் அதிகமான கருத்துக்கள் வரப்பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள கருத்துக்கேட்பு ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version