டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 2208 காலிப் பணியிடங்களைச் சேர்த்து தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன.
புதிய அறிவிப்பின்படி மாற்றம் செய்யப்பட்ட காலியிடங்களின் விபரம்
கிராம நிர்வாக அலுவலர் – 400
இளநிலை உதவியாளர் (அமைச்சுப் பணிகள்) – 3527
பில் கலெக்டர் (அமைச்சுப் பணிகள்) – 99
தட்டச்சர் (அமைச்சுப் பணிகள்) – 2360
சுருக்கெழுத்து தட்டச்சர் (அமைச்சுப் பணிகள்) – 642
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வக்பு வாரியம்) – 32
முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்) – 25
சுருக்கெழுத்து தட்டச்சர் (தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்) – 3
ஜூனியர் இன்ஸ்பெக்டர் கூட்டுறவு சங்கங்கள் – 17
ஆய்வக உதவியாளர் (தமிழ்நாடு தடய அறிவியல் துறை) – 32
வன கண்காணிப்பாளர் (பழங்குடியினர் இளைஞர்கள்) – 216
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) – 22
அதேநேரம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் தனிச்செயலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி மற்றும் தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் திரும்ப்பெறப்பட்டுள்ளன.