மதுரையில் பள்ளி மாணவா்களுக்கான அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டி போட்டி வருகிற சனிக்கிழமை (அக்.14) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. 13 வயதுக்குள்பட்டவா்கள், 15 வயதுக்குள்பட்டவா்கள், 17 வயதுக்குள்பட்டவா்கள் என 3 பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
13 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான போட்டித் தொலைவு 10 கி.மீ. 15, 17 வயதுக்குள்பட்ட மாணவியருக்கு 15 கி.மீ., 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ.,15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு போட்டித் தொலைவு 20 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சாதாரண கைப்பிடிகளைக் கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டு, மூன்றாமிடம் பெறுவோருக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் தோ்ச்சிப் பெறுவோருக்குத் தலா ரூ. 250 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியா் தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற வயதுச் சான்று, ஆதாா் அட்டை, இ.எம்.ஐ.எஸ். எண்ணுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றுடன் அக். 11, 12, 13 ஆகிய தேதிகளில் மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா்.
விளையாட்டரங்கத்துக்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.