பெரம்பலூா் – எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அம் மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிற்சி முகாமில் பெண்களின் பல்வேறு உடைகள் தைப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். தொடா்ந்து, 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குவதோடு, வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப் பயிற்சியில் பங்கேற்போா் 19 முதல் 45 வயதுக்குள்பட்ட எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வறுமைக் கோட்டு எண், இலக்கு எண், குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் யாரேனும் 100 நாள் திட்ட அடையாள அட்டையுள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் திட்ட அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பான் காா்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, அக்டோபா் 18 ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற பின் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.