திருவண்ணாமலை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர வழிகாட்டும் நிகழ்ச்சி திருவண்ணாமைல மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்து உயர் கல்வியை இதுவரை தொடராத மாணவர்கள், கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு வருவாய் கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை(27ம் தேதி) நடக்கிறது. அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 4ம் தேதி செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்திலும், வருகிற 8ம் தேதி ஆரணி சுப்பிரமணியர் சாஸ்திரியார் நிதியுதவி மேல்நிலை பள்ளி வளாகத்திலும் நடைபெற உள்ளது.
முகாமில் உயர் கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான வழிகாட்டுதல், சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிட சான்று ஆகிய சான்றுகள் வழங்குதல், வங்கிக்கடன் பெறவும், திறன் பயிற்சி மற்றும் பிற உதவிகள் சார்ந்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
மேலும் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், சமூக பாதுகாப்பு பிரச்னைகளை தீர்த்தல், பெற்றோர் மற்றும் மாணவர்களின் உயர் கல்வி விருப்பங்களுக்கான ஆலோசனைகள் வழங்குதல், மாநில மற்றும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, இலவச விடுதி மற்றும் உதவித்தொகை விவரங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விளக்கப்படும். எனவே, பிளஸ் 2 முடித்து உயர் கல்வி தொடராத மாணவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.