தமிழகத்தில், ஆறு வயதுக்கு உட்பட்ட பிரிவில், 51 குழந்தைகள் தத்தெடுப்புக்கு தயாராக உள்ளனர். தமிழகத்தில், 907 அரசு மற்றும் தனியார் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன.
இதில், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு, 30,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.இவர்களில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 365 பேர்.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் கீழ் இயங்கும், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் சான்றுப்படி, 51 குழந்தைகள் தத்து கொடுக்க தகுதி பெற்றுள்ளனர்.அதேநேரம், தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து, தென்னிந்திய மாநில எய்ட்ஸ் செயல் திட்ட இயக்குனர் சுவாமிநாதன் கூறியதாவது:
காப்பகங்களில் உள்ள குழந்தைகளை பொறுத்தவரையில், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே தத்து கொடுக்க முடியும்.ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை, வளர்த்தெடுப்பு முறையில் மூன்றாண்டுகள் வளர்த்தெடுக்கலாம். அக்குழந்தை பெரியவர்களாக ஆகும் வரை, ஒப்பந்தத்தைப் புதுப்பித்து வளர்க்கலாம். இந்த முறையில் வளர்த்தெடுக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நல பிரிவை அணுகலாம்.அதேநேரம், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது, 51 குழந்தைகள் மட்டுமே தத்து கொடுக்க தகுதி பெற்றுள்ளனர். மற்ற குழந்தைகள் பல்வேறு காரணங்களால் தத்து கொடுக்க முடியாத சூழல் உள்ளது.குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர், https://cara.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் இல்லாத பெற்றோர், ஒரு குழந்தை மட்டும் உள்ள பெற்றோரும் விண்ணப்பிக்க முடியும்.