தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எச்.சி.எல்., நிறுவனம் இணைந்து, அக்டோபர் 8ல், சென்னையில் சைக்கிளத்தான் போட்டியை நடத்துகின்றன.பயிற்சி பெற்ற அமெச்சூர் போட்டியாளர்கள், பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுவோருக்காக, தனித்தனி போட்டிகள் நடக்க உள்ளன.இதில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனையருக்கான ‘ஜெர்சி’யை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நேற்று எழும்பூரில் அறிமுகப்படுத்தினார்.அவர் பேசியதாவது:தமிழகத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
ஏற்கனவே செஸ், டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய சைக்கிளத்தான் சம்மேளனத்தின் சார்பில், சைக்கிளத்தான் போட்டி நடத்தப்படுகிறது.இளைஞர்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த போட்டிகள் இருக்கும்.சென்னையில், மாயாஜால் மல்டிபிளக்சில் துவங்கி, இ.சி.ஆர்., சாலையிலிருந்து, பல ஏற்ற, இறக்கங்களுடன் கோவளத்தை, 55 கி.மீ., துாரத்தில் அடையும் வகையில் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.பங்கேற்க, செப்., 20ம் தேதி வரை, www.hclcyclothon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான பரிசுத்தொகை, 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.