மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை மறு உத்தரவு வரும்வரை தள்ளிவைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.
எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டது.
அதாவது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் ‘நெக்ஸ்ட்-1’ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். அதைத்தொடர்ந்து, மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு ‘நெக்ஸ்ட்-2’ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும். அதேபோன்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் இந்தியாவில் மருத்துவ சேவையாற்றவும் அத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. முன்னதாக இந்தத் தேர்வு முறையால் மாணவர்களின் பயிற்சித் திறன் பாதிக்கப்படும் எனக்கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அடுத்தகட்டமாக மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் நேரில் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் ஜூலை 14-ம் தேதி (இன்று) தொடங்கும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து ‘நெக்ஸ்ட்’ தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒருங்கிணைப்புத் துறை செயலர் டாக்டர் பல்கேஷ் குமார் ‘நெக்ஸ்ட்’ தேர்வை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 11-ம் தேதி அளித்த ஆலோசனையின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், மறு உத்தரவு வெளியாகும் வரை தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


