விண்வெளி உணவு
சவால் போட்டி – தலா ரூ.18 லட்சம்
பரிசுத் தொகை
உலர்
பழங்கள், பெரும்பாலும் திரவ
நிலையிலான உணவு வகைகளே
இப்போது
விண்வெளி வீரர்களுக்கு பிரதானமாக
வழங்கப்படுகிறது. புவியீர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் இந்த உணவை சாப்பிடுவது என்பது மற்றொரு சவால்.
குறுகிய கால விண்வெளிப் பயணத்துக்கு இப்போதுள்ள உணவு முறை
ஓரளவு போதுமானதாக உள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் நீளும்
விண்வெளி பயணத்தின்போது விண்வெளி வீரர்களுக்கு எந்த
மாதிரியான உணவுகளை வழங்குவது
என பல்வேறு நாடுகளில்
விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய
விண்வெளி ஆய்வு நிறுவனமான
இஸ்ரோ 2022-இல் செயல்படுத்தவுள்ள ககன்யான்
விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு சப்பாத்தி,
சிக்கன் பிரியாணி, அல்வா,
பாதாம், இட்லி உள்ளிட்ட
30 வகை உணவுப் பொருள்களைத் தயாரித்து
வழங்க விஞ்ஞானிகள் முடிவு
செய்துள்ளனர். இவை
நீண்டநாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்கான ஆய்வு
நடைபெற்று வருகிறது.
விண்வெளி
வீரர்கள் பிரபஞ்சத்தின் தொலை
தூரத்தில் உயிர் வாழ்வதற்கு கவனமான உணவு தேவைப்படுகிறது. விண்வெளி உணவு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு
சாக்லெட் பார் ஒன்றை விஞ்ஞானிகள் தயாரித்தனர். இது விண்வெளி வீரர்களுக்கு ஆற்றலை வழங்குவதற்காக அதிக
கலோரிகளை கொண்டது.
அதே வேளையில், சாக்லெட்
பார்களால் விண்கலத்தில் உணவுக்கான எடையும் குறைவாகவே
இருக்கிறது. மேலும், நீண்ட
காலமாக சர்வதேச விண்வெளி
நிலையத்திலேயே கீரைகள்
உள்ளிட்ட செடிகளை உணவுக்காக
வளர்க்கும் முயற்சியிலும் நாசா
ஈடுபட்டுள்ளது. இதன்
ஒரு பகுதியாக, நீண்டகால
விண்வெளிப் பயணத்துக்கான சிறப்பு
உணவை உருவாக்குவதற்காக கனடா
விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து
ஒரு போட்டியையே அறிவித்துள்ளது நாசா.
விண்வெளி உணவு சவால் என்ற
இந்தப் போட்டியில் முதல்கட்டத்தில் வெற்றி பெறும் 20 அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா
ரூ.18 லட்சம் பரிசுத்
தொகையாக வழங்கப்படும். முதல்கட்ட போட்டியில் பங்கேற்பவர்கள் மே 28-ஆம் தேதிக்குள் நாசா இணையதளத்தில் பதிவு
செய்துகொள்ள வேண்டும். இப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து யார்
வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
NOTE: அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பரிசுத்
தொகை வழங்கப்படும். மற்ற
நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி
பெற்றாலும் பரிசுத் தொகை
வழங்கப்படாது.
உறைந்து
போகாத, பேக்கிங் செய்யப்படாத, எளிதில் தயாரிக்கக் கூடிய
உணவு வகைகளையே விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான
தொழில்நுட்பம், சத்தான
உணவு ஐடியாக்கள் இருப்பதாக
நினைத்தால் நீங்களும் போட்டியில் பங்கேற்கலாம்.