தமிழ்நாடு கட்டுமான கழகத்தால், சார்பில் தொழிலாளர்களுக்கு 3 மாத இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒருவார திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த உறுப்பினர்கள், கொத்தனார், வெல்டர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய தொழில்களில் ஈடுபடுவோர் பங்கேற்கலாம்.
இதற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 3 மாத திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் அமைய உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்தில் ஒரு மாதமும், காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி பயிற்சி நிலையத்தில் 2 மாதமும் பயிற்சி அளிக்கப்படும்.
5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் எல் அண்ட் டி நிறுவனத்தில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
அதுபோல், ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தையூரில் அமைய உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்தில், ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் 18 வயது பூர்த்தி அடைந்து இருப்பதுடன், தமிழ்மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு வார பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தினமும் ரூ.800 வழங்கப்படும். இதில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். இந்த பயிற்சி சென்னை தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
எனவே பயிற்சியில் சேர தகுதியுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய நலவாரிய அட்டை, கல்வித்தகுதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி புத்தகம் ஆகிய நகல்களுடன் மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.