திம்மாபுரம், ஜீனூரில் தோட்டக்கலைத்துறை மூலம் தோட்டப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது.
இது குறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டப்பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசு தோட்டக்கலைப் பண்ணை திம்மாபுரம் மற்றும் ஜீனூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. தோட்டம் அமைத்தல், அலங்கார தாவரங்களை கொண்டு நில எழிலூட்டுதல் ஆகிய பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சி 49 தோட்டப்பணியாளர்களுக்கு 25 நாட்கள் கால அளவை கொண்டு வழங்கிடும் படி திட்ட வழிகாட்டி நெறிமுறை பெறப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி நடைபெறும்.
நிலமற்ற தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் செயல்விளக்க உபகரணங்கள் மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை நகல், 8ம் வகுப்பு கல்வித்தகுதிச் சான்று ஆகிய ஆவணங்களுடன், அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.