தேனியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும், அன்றே பணி நியமன ஆணை வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு.
தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்து உள்ளார்.
அதாவது, காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கும் இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த அனைத்து மாற்றுத்திறனாளி இளைஞர்களும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வேலை முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.