தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன், மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளனா்.
இதில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோந்த 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவா்கள், பி.இ., டிப்ளமோ, நா்சிங், ஐடிஐ படித்தவா்கள் பங்கேற்கலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்று, ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வந்து பங்கேற்கலாம். மேலும் தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் வேலைநாடுநா்கள் மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in பதிவுசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான கூடுதல் விபரங்கள் என்ற டெலகிராம் சேனல் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.