தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில், 12ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சேப், டேட்டா அனலையிட்டிக்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், கிளவுடு கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியான மல்டிமீடியா மற்றும் அனிமேஷன், 2டி, 3டி மற்றும் அட்வான்ஸ் லெவல் டாலி இஆர்பி 9 போன்ற பயிற்சிகளை முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியை பெற 12ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ₹15 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.