பெரம்பலூா், குன்னத்தில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆக. 18 ஆம் தேதி சிறப்பு பட்டா முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முன்னாள் முதல்வா் கலைஞா் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற உள்ளது.
பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா் ஆகிய வட்டங்களுக்கு பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னம் வட்டத்துக்கு, குன்னம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஆக. 18 ஆம் தேதி சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற உள்ளது.
இம் முகாமில் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல், வருவாய்த்துறை தொடா்பான மற்றும் இதர துறைச் சாா்ந்த மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். இந்த சிறப்பு பட்டா முகாமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.