ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 60,000 பேரை வேலைக்கு அமர்த்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக தமிழகம், கர்நாடகா, புதுடில்லி தலைநகர் பிராந்தியம் ஆகிய இடங்களில், இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.உலகளவில் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக இந்தியா வளர்ந்து வருகிறது. இதையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், 80,000 முதல் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் போன்ற ஆப்பிள் போன் ஒப்பந்த தயாரிப்பாளர்களும், டிக்ஸான் டெக்னாலஜிஸ் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிற மின்னணு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது மனித வளத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.