TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிதியுதவியுடன் அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘நடித்தல் போட்டி’ (ரோல் ப்ளே) தேசிய அளவில் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல், நிதியுதவியுடன் வளரிளம் பருவக் கல்வி சாா்ந்த ‘பங்கேற்று நடித்தல்’ (ரோல் ப்ளே) போட்டி அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நிகழாண்டுக்கான போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டி பள்ளி, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட்டு மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவா் குழுவுக்கு, ஆங்கிலத்தில் ‘பங்கேற்று நடித்தல்’ செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அந்தக் குழு தென் மண்டல அளவில் பங்கேற்கும்.
தென் மண்டல அளவில் முதல் இரு இடங்களைப் பெறும் மாநில அணிகள் புதுதில்லியில் உள்ள தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகள், சத்தான உணவு- உடல்நலம், தற்காப்பு (உடல், மனம், மன எழுச்சி), இணையம், மின்னியக் கருவிகள் மற்றும் ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல், போதைப் பழக்கத்தின் காரணமும் தடுப்பும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போட்டியை மாவட்ட, மாநில அளவில் நடத்துவதற்கு வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் இது தொடா்பான தகவல்களை அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.