வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள் உதவித்தொகை பெற
அழைப்பு
– நீலகிரி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கூறியிருப்பதாவது:
தமிழக
அரசால் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் சென்ற காலாண்டு
வரை 181 பதிவுதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் படி பதிவுதாரர்களுக்கு அவர்
தம் கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் அதற்கு கீழ்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,
பள்ளி இறுதி வகுப்பில்
தேர்ச்சி, அதற்கு சமமான
கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள், முதுநிலை
பட்டதாரிகளுக்கு ரூ.1000
வழங்கப்படுகிறது.
இந்த
உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதற்கு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு
நிறைவு செய்திருக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பு ஏதும்
இல்லை. இந்த பயனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த ஒரு கல்வி
நிறுவனத்திலும் முழு
நேர மாணவராக இருக்க
கூடாது.
விண்ணப்பதாரர் அரசு, தனியார் துறையிலோ
அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பள்ளி
அல்லது கல்லூரி கல்வியினை
முழுவதுமாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர்,
கணவர், மனைவி, பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்
தமிழ்நாட்டில் குடியிருத்தல் வேண்டும்.
நீலகிரி
மாவட்டத்தில் உள்ள
தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும்
ஒரு வங்கியின் கிளையில்
சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள், இதுவரை
விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக
விண்ணப்பத்தை பெற்று
முழு விவரங்களை பூர்த்தி
செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கி
உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.