இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்துக்கு, தமிழக அரசு ரூ.1.17 கோடி ஒதுக்கியுள்ளது.
45 நாட்கள் பயிற்சி அளித்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து, வேலைவாய்ப்பு வழங்குவது அல்லது தொழில் முனைவோராக்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
பாரம்பரியமான கைத்தறி தொழிலை, பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது; கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள், கைத்தறி தொழிலை அதே பகுதியில் ஆரம்பித்தல்:
வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத்தொழில் பயிற்சி அளிக்கப்படும். 2023-24ல், 300 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி அளிப்பதன் மூலம் கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும், அளவையும் மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருவோருக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவராக, எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.பயிற்சியில் சேர விரும்புவோர், www.loomworld.in என்ற இணைய தளத்தில், ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். சிறுமுகையில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வரும், 26ல் நடக்கும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.