அக்னி வீரர்கள் திட்டத்தில் இனி முதலில் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
அக்னி வீரர்கள் திட்டத்தில் பாதுகாப்பு படைகளின் முப்படைகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படும் திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 19,000 பேரும், கடற்படை மற்றும் விமானப்படையில் தலா 3,000 பேர் என மொத்தம் 25,000 பேர் ஏற்கெனவே பயிற்சி பெறுகின்றனர்.
மேலும் 21,000 அக்னி வீரர் களுக்கான பயிற்சி மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்படையில் மட்டும் 341 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். இதேபோல் ராணுவம் மற்றும் விமானப்படையும் பெண்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்த 46,000 அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே, முதல் 4 ஆண்டு சேவைகளுக்குப்பின் 15 ஆண்டு கால பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ரூ.11.71 லட்சம் நிதியுடன் விடுவிக்கப்படுவர். இவர்களுக்கு துணை ராணுப் படைகள் மற்றும் மாநில போலீசில் சேர இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அக்னி வீரர்கள் திட்டத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளில் உடல் தகுதி தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இவர்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால் அக்னி வீரர்கள் தேர்வு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலில் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு நடத்தப்படும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இந்த மாத இறுதியில் தொடங்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நாடு முழுவதும் 200 இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தேர்வானால் மட்டுமே உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு நடத்தப்படும்.