ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது.
இதனால் வீடு, வாகன கடன்கள் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ உயர உள்ளது.
இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு முடிவு செய்கிறது. ஆறு பேர் கொண்ட இக்குழு இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பிக்கும். இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக ரெபோ விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
ரெப்போ விகிதம் என்பது, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. 2வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது. இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டதால் இஎம்ஐ அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் மே முதல் பிப்ரவரி வரையில் மொத்தமாக 2.25 சதவிகித அளவிற்கு ரெப்போ விகிதம் உயர்த்தியது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. மாத சம்பளம் வாங்கி வீடு, வாகனக்கடன் வாங்கியுள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கு மீண்டும் ஒரு சுமையை ஏற்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே நேரத்தில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி உயர்வு சாதகமாக உள்ளது.