சென்னை:ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்போருக்கான, உறைவிட சிறப்பு பயிற்சி திட்டத்தை, ‘வெராண்டா’ ஐ.ஏ.எஸ்., நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, வெராண்டா ஐ.ஏ.எஸ்., நிறுவனம், சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்போருக்கு, உறைவிட பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
‘அகாடமி பார் சிவில் சர்வீசஸ் ஆஸ்பிரன்ட்ஸ்’ என்ற பெயரிலான இந்த திட்டத்தில், ஓராண்டுக்கு முழுமையாக உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
சென்னையில் உள்ள பிருந்தாவன் வளாகத்தில், 150 மாணவர்களுக்கு, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கும். இதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக, வெராண்டா கல்வி உதவித் தொகை தேர்வான ‘வெஸ்ட்’ தேர்வு நடத்தப்படும்.
வரும், 25ல் வேலுார்; 26ல் திருநெல்வேலி; மார்ச் 4ல் சேலம்; மார்ச் 5ல் கோவை; மார்ச் 11ல் திருச்சி மற்றும் மார்ச் 12ல் மதுரை ஆகிய இடங்களில் தேர்வுகள் நடக்கும்.
தேர்வில், ஐந்து மாணவர்களுக்கு, 100 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களின் விபரம் மார்ச், 19ல் சென்னையில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
இந்த பயிற்சி திட்டத்தின் தலைமை வழிகாட்டியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் செயல்படுவார்.
அகாடமி மாணவர்களுக்கு, அவர் தனிப்பட்ட வழிகாட்டல் வழங்குவார். தேசிய அளவிலான நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், பயிற்சி அளிப்பர்.
இந்நிலையில், சென்னையில் நடந்த சிறப்பு பயிற்சி திட்ட துவக்க நிகழ்ச்சியில், வெராண்டா ஐ.ஏ.எஸ்., நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பரத் சீமான், ‘அறிவொளி சுடர்’ என்ற ஜோதியை, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் ஒப்படைத்தார்.
இந்த சுடர், வெஸ்ட் தேர்வு நடக்கும் ஆறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.